இன்று முதல் மின் இழுவை ரயில் இயக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து 3 மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக 3-ஆம் எண் மின் இழுவை ரயில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ராஞ்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய ரோப்பை மின் இழுவை ரயிலுடன் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று பஞ்சாமிர்த பெட்டிகளை மின் இழுவை ரயிலில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தியுள்ளனர். அந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு மின் இழுவை ரயில் கொண்டுவரப்படுவதாககோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.