கொல்கத்தா நகரின் இரவு வாழ்க்கையை ஜொலிக்க வைத்த காப்ரே குயின் மிஸ் ஷெஃபாலி தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
வங்காள திரையுலகின் முதல் காபரே டான்ஸரும், நடிகையுமான மிஸ் ஷெஃபாலி மாரடைப்பால் மரணமடைந்தார்.
காப்ரே குயின் என்று அழைக்கப்பட்ட மிஸ் ஷெஃபாலி தனது சோதேபூர் வீட்டில் நேற்று (பிப்ரவரி 6) காலை மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் மரணமடைந்ததாக்க கூறப்படுகிறது. அவருக்கு வயது 77. இவர் சிறுநீரக தொற்று ஏற்பட்டு சிகிச்சையும் மேற்கொண்டு வந்திருந்தார். இவரது மறைவுக்கு வங்காள திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஷெஃபாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, மிஸ் ஷெஃபாலி என்று அழைக்கப்படும் நடிகை ஆரதி தாஸ் குடும்பத்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
1960-70களில் செஃபாலியின் காப்ரே நடனங்கள் கொல்கத்தா நகரின் இரவு வாழ்க்கையை ஜொலிக்க வைத்தன. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், வங்காள திரையுலகின் சூப்பர் ஸ்டார் உத்தம் குமார் என பல நடிகர்கள் செஃபாலியின் நடனத்துக்கு தீவிர ரசிகர்களால் இருந்ததுடன், அவரது நடனத்தை பார்த்து மயங்கியுள்ளனர். பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரேவின் சீமபத்தா, பிரதித்வாண்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் ஷெஃபாலி.
ஆரதி தாஸ் என்பது இவரது நிஜப் பெயர். அப்போதைய கிழக்கு வங்காளமாகவும், தற்போது வங்களாதேச நாடாகவும் இருக்கும் பகுதியிலிருந்து அகதியாக மேற்குவங்கத்துக்கு வந்த ஆரதி தாஸ், குடும்ப சூழ்நிலை காரணமாக தனது 12 வயது முதல் காபரே நடனம் ஆடத்தொடங்கினார்.
‘சந்தியா ராட்டர் ஷெபாலி’ (ஷெஃபாலியின் மாலைப்பொழுதும் இரவுகளும்) என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட ஷெஃபாலி, வயது முதிர்ந்த நாட்களில் பண பிரச்னையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளார். வங்களா நடிகையான கொங்கோனா சென் ஷர்மா, ஷெஃபாலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் எடுக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார்.
அந்த வெப் சீரிஸில் ஷெஃபாலியின் கதை மட்டுமல்லாமல், 1960 – 70களில் வங்காளத்தில் அரசியல் சூழ்நிலை பற்றியும் விவரிக்கவும் இருப்பதாகக் கூறினார்.