Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பழிக்குப்பழி…! சதமடித்து அசத்திய ஷ்ரேயஸ்….. வெளுத்தெடுத்த கிஷன்…. “தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி”…. 1:1 என தொடரை சமன் செய்த இந்தியா..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது.  இந்த போட்டியில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னாய் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

அதேபோல தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் தப்ராஸ் ஷம்ஸி ஆகிய இருவருக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் பார்ச்சூன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். எனவே கேசவ் மகாராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

 

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயிண்டன் டி காக்  5 ரன்களும், ஜன்னிமன் மலன் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்..  அதன்பிறகு ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இருவருக்குமே சதம் அடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.. இருப்பினும் ஹென்றிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்களும், மார்க்ரம் 89 பந்துகளில் 79 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

 

பின் கடைசியில் ஹென்ரிச் கிளாசென் 30 ரன்களும், டேவிட் மில்லர் 35 (34)  ரன்கள் எடுக்க தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் சேர்த்தது. கடைசியில் அடித்து ஆடக்கூடிய மில்லர் களத்தில் இருந்தும் டெத் ஓவர்களில் இந்திய அணி பந்துவீச்சாளர்களான ஆவேஷ் கான், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால் தென்னாப்பிரிக்க அணியால் 300 ரன்களை தாண்ட முடியவில்லை..  இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 13 ரன்களிலும், சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 8.5 ஓவரில் 48 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில்,  இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.. இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. இருவருமே அரை சதம் கடந்து மிகச்சிறப்பாக ஆடினர்.. இஷான் கிஷன் (84 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட  93 ரன்கள் ) சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஷ்ரேயஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்தனர். ஷ்ரேயஸ் ஐயர் தனது 2ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 45.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ரன்களுடனும், சாம்சன் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1: 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்குமிடையே 3ஆவது ஒருநாள் போட்டி டெல்லியில் நாளை மறுநாள் (11ஆம் தேதி) நடைபெறவுள்ளது.

Categories

Tech |