வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் இருக்கும் செருப்பாலூரில் நாராயண பிள்ளை என்ற முதியவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் முதியவரை மிரட்டி அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலை வீசித் தேடி வந்தனர். அந்த விசாரணையின் போது திற்பரப்பு அருகில் பதுங்கியிருந்த அந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் கிருஷ்ணகிரி பகுதியில் வசிக்கும் முத்தையா மற்றும் மாயாண்டி என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இவர்களது தந்தை பீர்முகமது என்ற அய்யாதுறை சகோதரர் கோதா ஆகியோரை சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். இவர்கள் தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருப்பதாகவும், இவர்கள் வெளியில் வந்தவுடன் இவர்களை கொலை செய்வதற்காக காத்திருப்பதாகவும் கூறினர். மேலும் இதற்காக பணம் தேவைப்படுவதாகவும் அதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் 2 வாலிபர்களும் வாக்குமூலம் கொடுத்தனர். மேலும் பாளையங்கோட்டை, விஜயநாராயணம், சிவந்திபுரம், மூலைக்கரைப்பட்டி, அம்பை, நெல்லை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல வழக்குகள் பதிவாகியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது