Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பழுதடைந்த சாலை…. சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தொட்டபெட்டா மலை சாலையை விரைவில் சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்குப் பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து மழைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் சாலையின் அடிப்பகுதியில் மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பழுதால் தொட்டபெட்டா மலை சுற்றுலா தலம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக சாலை சீரமைக்கப்படாததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்திவரும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றி அங்குள்ள வியாபாரிகள் வெளியில் சென்று தொழில் நடத்தி வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் தொட்டபெட்டாவிலுள்ள சுற்றுலா தளம் மூடப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சேதமடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி விரைவாக தொடங்கி அதனை 20 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி முடிவடைந்ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் பல மாதங்களாக சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |