மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி யுவராஜ் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதனால் படுகாயமடைந்து மின் கம்பியிலேயே தொங்கிக் கொண்டிருந்த யுவராஜை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவராஜை இரண்டு பேர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.