பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்குப் பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பெரும்பாலான சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகத் தான் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் முதல்வரின் உத்தரவைப் பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் சமீப காலமாகவே பல இடங்களில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் உயர்நிலைப் பள்ளியின் முன்பு போராட்டம் நடந்துள்ளது. இந்தப் போராட்டம் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சீனியாரிட்டி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.