தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஓய்வூதிய திட்டத்திற்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் என்னென்ன வேறுபாடு? அதில் என்னென்ன பலன்கள் உள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது.
அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்குள்ளேயே பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தினார். புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை நீக்கி விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் மற்றும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயனாளிகளாக இணைந்துள்ளனர்.
ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பல்வேறு மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும். பென்சனுக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு நிலையான பென்ஷன் அவர்களுக்கு கிடைக்கும். பென்சன் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்கும் போன்ற பல்வேறு அம்சங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளன.
ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி கிடையாது. பென்ஷன் பணம் சம்பளத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும். பணி ஓய்வு பெற்ற பிறகு நிலையான பென்ஷன் வருவதற்கு உத்திரவாதம் கிடையாது. பணி ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பென்ஷன் வழங்கப்படும். எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அதிக அளவு நன்மைகள் உள்ளதால் அதனை அமல்படுத்த அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.