மத்திய அரசு இருசக்கர வாகனம் மற்றும் பழைய காரின் பதிவை புதுப்பிக்காமல் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியது. இதற்காக ஏற்கனவே 600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 15 ஆண்டுகளான பழைய கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு செலவு 5,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பழைய கார்களை புதுப்பிக்க தவறினால் மாதம் 500 ரூபாய் வீதம் அபராதம் செலுத்த வேண்டும். இதனையடுத்து இரு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கு 300 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 1200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை புதுப்பிக்க தவறினால் மாதம் 300 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.
இதேபோல் இறக்குமதி செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கான மறுபதிவு கட்டணம் 2,500 ரூபாயிலிருந்து 10 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்தது. கார்களுக்கு 15 ஆயிரத்திற்கு பதிலாக 40,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தனியார் வாகனங்கள் பதிவை புதுப்பித்து இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து டாக்சிகளுக்கு 600 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், பேருந்து மற்றும் லாரிகளுக்கு 1,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் வாகன தகுதி சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.