புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த 2013-ம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்கள் நீண்ட வருடங்களாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதோடு CPS என்ற அமைப்பை தொடங்கி அதில் பல்வேறு அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில் CPS அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மண்டல அளவிலான கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கருத்தரங்கம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் சிறப்புரை ஆற்றுவார். இந்த கருத்தரங்கத்தில் சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதேபோன்று மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 10 மணி முதல் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாலை 3:30 மணி அளவிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி காலை 10 மணி அளவிலும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. மேலும் செப்டம்பர் 9-ஆம் தேதி மண்டல அளவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் சிபிஎஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.