தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு புதுப்பிப்பதற்காக வழங்கப்படும் தகுதிச் சான்றுக்கு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு வாகன உரிமையாளர்கள், மாநில அரசுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய வாகனங்களின் தகுதி சான்றை புதுப்பிக்கும் கட்டணம் நேற்று முதல் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது வாகனங்கள் வாங்கி எட்டு ஆண்டுகள் வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி சான்றை புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனம், 1,800 ரூபாயும், மூன்று சக்கர வாகனத்துக்கு 5,000 ரூபாயும் ; இலகு ரக வாகனத்திற்கு 9,100 ரூபாயும், மத்திய ரக வாகனம், 14 ஆயிரத்து 300 ரூபாயும் , கன ரக வாகனங்களுக்கு, 15 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.