பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் திட்டம் 2001ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பாக தயாரித்த வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை அமல்படுத்த தமிழக அரசு 2021ஆம் ஆண்டு ஜனவரியில் டெண்டர் வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டரை எதிர்த்து யார்யா சேகர் என்ற நிறுவனத்தின் இயக்குனர் செந்தாமரை தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு அறிவிப்பின்படி மத்திய அரசின் உரிமம் பெற்ற வாகனங்கள் தான் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் உத்தரவின்படியும், மத்திய அரசின் அறிவுரை படியும் அந்த பணிகளை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்து செந்தாமரை கண்ணன் தொடர்ந்த மேல்முறையீடு தலைமை நீதிபதி முனீஸ்வரி மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் உறுதி செய்யப் படுகிறதா அல்லது ரத்து செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள் டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதால் மேல்முறையீடு வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.