அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதோடு, பில்லூர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்படுவதால் வினாடிக்கு 2,849 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக இருக்கும் பட்சத்தில், நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.