ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தொகுதியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என பல்வேறு புகழ்பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. 2011ம் ஆண்டு வரை சத்தியமங்கலம் பவானிசாகர் என இரு தொகுதிகள் இருந்தது. இரண்டு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வாக்காளர்கள் என மாறி மாறியே வெற்றி பெற்றுள்ளனர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஒன்றுபட்ட பவானிசாகர் தொகுதியாக மாறியது.
2011 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 2016 றில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. பவானிசாகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,53,946 ஆகும். தொகுதியின் பெரும்பான்மையான உள்ள பழங்குடியினர் லிங்காயத்து, முஸ்லீம் வகுப்பினரே வெற்றியை நிர்மாணப்பவர்களாக உள்ளனர். கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் இன மக்களுக்கு ST சான்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
தாளவாடி மலைப்பகுதி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை அந்த பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். காகித ஆலையின் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்து பவானி ஆற்று நீர் விஷமாக மாறி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதேபோன்று சத்தியமங்கலம் மல்லிகைப் பூவிற்கு என தனி மவுசு இருப்பதால் மல்லிகைப்பூ நறுமண ஆலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இணைக்கும் முக்கிய பாதியாக விளங்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் குறுகலாக உள்ளதால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது பவானிசாகர் தொகுதி வாசிகளின் ஆதங்கம். நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள் வரும் தேர்தலுக்கு பிறகாவது நிறைவேற்றப்படுமா என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும்.