இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மந்தவெளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகர் ஸ்பென்சர் பிளாசா பார்க்கிங்கில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடிந்து திரும்பி வந்த போது பார்க்கிங் என்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து தினேஷ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்ததில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து தினேஷ் சிசிடிவியில் பதிவாகி இருந்த குற்றவாளியின் புகைப்படம் மற்றும் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் புகைப்படம் ஆகியவற்றை தன்னுடைய வியாபார ரீதியிலான குழுவின் வாட்ஸ் அப்பில் பதிவு செய்து தனக்கு தகவல் கொடுக்கும்படி தெரிவித்திருந்தார். அதைப் பார்த்த சிலர் தினேஷின் காணாமல் போன இரு சக்கர வாகனம் அண்ணாநகர் பகுதியில் சுற்றுவதாக கூறியுள்ளனர். கடந்த 28-ஆம் தேதி அண்ணாநகர் பகுதியில் தன்னுடைய மோட்டார் சைக்கிள் இருப்பதை தெரிந்து கொண்ட தினேஷ் தன்னுடைய நண்பர்களை அழைத்துச் சென்று இருசக்கர வாகனத்தை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அண்ணா நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பதும், தாஸ் என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே இருப்பதும் தெரிய வந்தது. மேலும் ஜாமினில் வெளியே இருக்கும் பார்த்தசாரதி தினந்தோறும் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட வேண்டும். இங்கு பஸ்ஸில் சென்று வர 3 மணி நேரம் ஆவதால் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரியவந்தது.