பெரம்பூர் பஸ்சை வழிமறித்து அதற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பஸ் தினத்தை சென்னை அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை, பெரம்பூர்- மாதவரத்தில் உள்ள லஷ்மி அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த பந்தர் கார்டன் சென்னை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதே வழியாக வந்த பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் வரை செல்லும் தடம் எண் 64 கொண்ட பஸ்ஸை வழிமறித்து மாலை அணிவித்து கேக் வெட்டி பஸ் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதைப் பார்த்த கண்டக்டர் வேலு மாணவர்களை திட்டிய போது மாணவர்கள் கண்டக்டர் வேலு மீது கேக்கை வீசிவிட்டு தப்பி ஓடினார்கள். இதனால் ஆத்திரமடைந்த கண்டக்டர் வேலு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.