திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுகள் உடன் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பேருந்து டிக்கெட்டுடன் தினமும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் இந்த முறையில் ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.