சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தனியார் பேருந்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கப்படும் பேருந்தின் தகுதிச் சான்றுக்காக, அதன் உரிமையாளர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இ-சலானை கொடுத்துள்ளனர். அதில், தலைக்கவசம் அணியாமல் பேருந்தை ஓட்டியதாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, பேருந்து உரிமையாளர் சரவணன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விநோதமான விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை அவர் செலுத்த முன்வந்தபோதும், நேற்று அலுவலக நேரம் முடிந்ததால், அவரால் செலுத்த முடியவில்லை. இனி நாளைதான் அபராதம் செலுத்தமுடியும் என்றும், புதன்கிழமைதான் தகுதிச் சான்று பெற முடியுமெனவும், பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பேருந்திற்கு தலைக்கவசம் அணியவில்லை என விநோத அபராதம் விதித்ததோடு, சேலம் மாவட்டத்தில் ஓடும் பேருந்திற்கு திருச்சியில் விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டச் சொல்லி தட்டிக்கழித்ததால், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.