பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கிட்டத்தட்ட மூன்று கிலோ ஹெரோயின் போதை பொருள் கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளின் அத்துமீறல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் அங்கிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. பஞ்சாப் எல்லை வழியாக அடிக்கடி இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக பாயும் ராவி ஆற்றின் எல்லையில் பாதுகாப்பு படையினர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகிக்கும் வகையில் பார்சல் ஒன்று ஆற்று நீரில் மிதந்தது. அதனைக் கண்ட படை வீரர்கள் அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்ததில் 2 பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தன. அந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் 2.980 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட ரூ.14.90 கோடி ஆகும். பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் கடத்தல் கும்பலை சார்ந்தவர்களுக்கு இந்த ஆற்றின் வழியாக போதைப் பொருட்களை அனுப்பியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடத்தல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.