பாகிஸ்தானில் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற தட்டா மாவட்டத்தில் கீஞ்சர் ஏரி இருக்கின்றது. அங்கு படகு சவாரி மிகவும் புகழ்பெற்றது. அதனால் நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்லும் படகில் உரிமையாளர்கள் அவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை வழங்குவதில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் படகு ஒன்றில் சவாரி செய்துள்ளனர்.
அச்சமயத்தில் எதிர்பாராத வகையில் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்ததால், அனைவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் எட்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து அதிக சுமை மற்றும் பலத்த காற்று காரணமாகவே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.