Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம்…. நாளை(ஏப்ரல்.9) வாக்கெடுப்பு…. வெளியான அதிரடி தீர்ப்பு…..!!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டு, பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை(ஏப்ரல் 9)ஆம் தேதி  வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தீர்ப்பளித்தது.  பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது சென்ற 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். இதையடுத்து இம்ரான் கான் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவு பிறப்பித்தார். இவ்விவகாரத்தை அந்நாட்டின் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இவற்றில் நேற்று தொடர்ந்து 4வது நாளாக விசாரணை நடைபெற்றது.

அப்போது விசாரணை முடிவில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நாடாளுமன்றத்தை 9 ஆம் தேதி (நாளை) கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்று காலை 10 மணிக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர். பிரதமருக்கு எதிரான இத்தீர்மானம் வெற்றியடைந்தால் புதிய பிரதமரை நாடாளுமன்றம் நியமிக்கும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இத்தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஒருமனதாக வெளியிட்டனர். நாடாளுமன்றத்தை கலைக்கும்படி அதிபருக்கு பரிந்துரைக்க பிரதமருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இவ்விவகாரத்தில் இதுவரையிலும் எடுக்கப்பட்ட அனைத்து  முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர். முன்பாக இவ்வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் கூறியதாவது, “துணை சபாநாயகர் காசிம் சூரி, இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்த நடவடிக்கை அரசியல் சாசனத்தின் 95வது பிரிவை மீறிய செயல் என்பதற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது” என கருத்து தெரிவித்தார். சுப்ரீம்கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ள இம்ரான் கான் அரசு, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் கவிழும் நிலை உறுதியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |