300 வருட பழமையான விஷ்ணு கோவில் ஒன்று பாகிஸ்தானில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் சேர்ந்து பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்திலுள்ள பாரிகோட் குண்டாய் மலைப்பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளரான பசல் காலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விஷ்ணு கோவிலானது சாஹி அரச வம்ச காலத்தில் அதாவது சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
ஸ்வாத் மாவட்டத்தில் 1000 வருடங்களுக்கு முற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளதாகவும், மேலும் இங்கு சாஹி அரச வம்சத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.
கிபி 850 முதல் 1026 வரை இந்தியாவின் வட மேற்கு பகுதிகளை ஆண்டு வந்த சாஹிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஷ்ணு கோவிலை ஒட்டி இராணுவமுகாம், மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் போன்றவை அமைத்து இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இந்த கோவிலில் பக்தர்களுக்காக புனித தீர்த்தம் ஒன்றும் அமைந்துள்ளது என்று ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் லூக்கா தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாவட்டத்தில் பௌத்த வழிபாட்டு கோவில்களும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.