Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை!…. சிரமப்படும் 3 கோடி பேர்…. வெளியான தகவல்….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஜூன் -செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழை காலமாகும். பருவ மழையின்போது நாடு முழுதும் பரவலாக மழைபெய்யும். ஒருசில இடங்களில் கன மழை மற்றும் வெள்ளபாதிப்புகள் ஏற்படும். எனினும் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே நாடு முழுதும் பயங்கரமாக மழைபெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இவ்வாறு மழையின் அசாதாரண அதிகரிப்பு நாடு முழுதும் திடீர் வெள்ளத்தை உருவாக்கியது.

சென்ற 10 வருடங்களில் ஏற்பட்ட மிகமோசமான பருவ மழையால் அந்நாட்டின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதற்கிடையில் கன மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரையிலும் 343 சிறுவர்கள் உட்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சம் சிந்து மாகாணத்தில் சென்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் இப்போது 306 பேர் கன மழை மற்றும் வெள்ளம் குறித்த சம்பவங்களில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் தொடர்ச்சியாக பலூசிஸ்தான் மாகாணத்தில் 234 நபர்களும், கைபர் பக்துங்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் முறையே 185 மற்றும் 165 நபர்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 37 பேரும், கில்கிட் பிராந்தியத்தில் 10 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு உள் கட்டமைப்புகள், மின் பரிமாற்ற உள்கட்டமைப்புகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து, தகவல்தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி இருக்கிறது. வெள்ளம் காரணமாக சுமார் 3கோடி பேர் தங்கும் இடம் இன்றி உள்ளதாகவும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கன மழை, வெள்ள பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை கருதி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு நாடு முழுதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான மந்திரி ஷெர்ரி ரெஹ்மான் இது தொடர்பாக கூறியதாவது “பருவமழையின் 8வது சுழற்சியைக் கடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக நாட்டில் 3 -4 சுழற்சிகள் மட்டுமே பருவ மழை பெய்யும். செப்டம்பர் மாதத்தில் மற்றொரு சுழற்சி மீண்டுமாக எழுவதற்கான சாத்தியக்கூறுகளை தரவு தெரிவிக்கிறது. ஆகவே நாடு முழுதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

Categories

Tech |