பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2ஆம் ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்- இரவாக நடைபெற்றது. முதலாவதாக விளையாடிய ஆஸ்திரேலியா 50ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன் குவித்தது. இதில் பென்மெக்டர் மட் 104 ரன், டிரெவிஸ் ஹெட் 89 ரன், லபுஷேன் 59 ரன், ஸ்டோனிஸ் 49 ரன் எடுத்தனர். இதையடுத்து ஷகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட் மற்றும் முகமது வாசிம் 2 விக்கெட் எடுத்தனர். அதன்பின் 349 ரன் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது. அந்த அணி ஒரு ஒவர் எஞ்சிய சூழலில் 349 ரன் இலக்கை எடுத்தது.
அதாவது பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. கேப்டன் பாபர் ஆசம், தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் போன்றோர் சதம் அடித்தனர். இதனிடையில் பாபர் ஆசம் 83 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), இமாம்-உல்-ஹக் 97 பந்தில் 106 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) பகர் ஜமான் 67 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இதில் பாபர் ஆசம் 15-வது சதத்தை பதிவு செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. 83 இன்னிங்சில் இதனை எடுத்து சாதனை புரிந்தார். இதற்கு முன் ஹாசிம் அம்லா 86 இன்னிங்சில் 15 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியானது ரன் இலக்கை எட்டியதிலும் புதிய சாதனை படைத்தது.