பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு வழங்கி வந்த கூட்டணிகட்சி ஆதரவை திரும்ப பெற்றதால், அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் காரணமாக அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. எனினும் துணை சபாநாயகர் காசிம் சூரி, அந்த தீர்மானத்தை நிராகரித்து, கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். இதையடுத்து இம்ரான்கான் சிபாரிசின் பேரில் அதிபர்நாடாளுமன்றத்தை கலைத்தார். அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என நேற்று முன்தினம் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதாவது இன்று காலை 10.30 மணிக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்துமாறு துணை சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
அத்துடன் எந்த உறுப்பினரையும் ஓட்டுப்போடவிடாமல் தடுக்கக்கூடாது எனவும் கூறியது. ஒரு வேளை தீர்மானம் தோல்வியடைந்தால் அரசு வழக்கம்போல் இயங்கலாம் என்று தெரிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றமானது இன்று காலை 10.30 மணிக்குகூடியது. அப்போது பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பேசியதாவது “சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் இன்றைய சபை நடவடிக்கைகளை நீங்கள் (சபாநாயகர்) மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு துணைநிற்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். இந்த தருணத்தை நீங்கள் உறுதியாக நம்பவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கைசர், உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். பின்பாகிஸ்தான் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு, இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான விவாதமானது பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் எவரும் சட்டசபையில் இல்லை எனவும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக இம்ரான்கானின் கட்சியான பி.டி.ஐ.யின் எந்த உறுப்பினரும் தேசிய சட்டசபைக்கு வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.