பாகிஸ்தான் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான்கான் தோல்வியடைந்து, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புது பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (70) போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின் புது அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் அவர் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) கட்சியின் 12 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கட்சியின் (பி.பி.பி.) 7 உறுப்பினர்களை தன்னுடைய அமைச்சரவையில் சேர்ப்பதற்கு ஷபாஸ் ஷெரிப் முடிவு செய்துள்ளார். இதேபோல் சபாநாயகர் ஆசாத் கைசர் பதவிவிலகும் முடிவை அறிவித்த சூழ்நிலையில், அந்த பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினரான ராஜா பர்வேஷ் அஷ்ரப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவர் முறைப்படி பாகிஸ்தான் நாடாளுமன்றம் சபாநாயகராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேறு உறுப்பினர் யாரும் இப்பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை. இதன் காரணமாக முன்னாள் பிரதமரான அஷ்ரப் போட்டி இன்றி சபாநாயகராக தேர்வாகியுள்ளார். அவருக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார். அதன்பின் பேசிய அஷ்ரப், இப்பதவிக்கு தகுதியான நபர் என தன்னை தேர்ந்தெடுத்ததற்காக தன் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். எதிர்க் கட்சிகளின் குரல் ஒடுக்கப்படாமல் இருப்பதற்கான பணியையும் செய்வது என் கடமை என்று நான் நினைக்கிறேன். அமைப்புகளுடன் கலந்து ஆலோசனை செய்வதிலேயே அரசியல் அமைப்பின் வலிமை இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.