ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடித்துக் கொண்டே வருகிறது. இரு நாட்டின் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலை கண்டித்து ஸ்பின் போல்டாக் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகவும், அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமில்லாமல், வருங்காலங்களில் பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டால் ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே வருங்காலங்களில் இதுபோன்ற மோதல்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.