நிதிநெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் கடும் மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் தினசரி 12 -14 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த நகர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக கோபமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். மேலும் நகரிலுள்ள முக்கிய சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் டயர்களை தீவைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 2வது நாளாக நேற்றும் மின்வெட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். எனினும் அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மீண்டுமாக நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.