கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் திகழ்கிறது. சீனா பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை பாகிஸ்தானில் செய்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சீனாவின் மிகப்பெரிய கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் பொருளாதார திட்டமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வணிக ரீதியான பல்வேறு திட்டங்களை பாகிஸ்தானில் செயல் படுத்துவதற்கு சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீன அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் பாகிஸ்தான் செல்வதற்கு முடிவு செய்திருந்தார்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அதே சமயத்தில் பயணத்தின் மறு தேதியை உறுதி செய்வதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மறு தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை மிக மோசமடைந்து கொண்டிருக்கும் நிலையில் சீன அதிபரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சர்வதேச அளவில் மிக மிக்கியமானதாக கருதப்படுகிறது.