ஏப்ரல் 10ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரும், முஸ்லீம் லீக் கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய அமைச்சர்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவர் சாதிக் சஞ்ரணி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அதிபர் ஆரிஃப் ஆல்பி புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த வாரம் நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவிலும் அதிபர் ஆரிஃப் ஆல்பி பங்கேற்கவில்லை.