பிரபல நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டிற்கான டெண்டரை சுற்றுலாத்துறை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரை சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரீசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் எங்கள் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இந்த டெண்டருக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை இறுதி செய்ததால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு பாக்கித்தொகை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது. இது டெண்டர் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.