திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தமிழக புதிய தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் சென்று துரைசாமி சந்தித்து வாழ்த்தினார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த துரைசாமி, பாஜகவில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்தது இதுவே முதல்முறை. அவர் என் இனத்தார், உறவினர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்கத் தான் சென்றேன். இந்த சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துரைசாமி அதிரடியாக விடுவிக்கப்பட்டார். இதனால் அவரும் பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்தநிலையில் தற்போது வி.பி துரைசாமி பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.