மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக தொண்டர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்தனர்.
இதனிடையே அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க திமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏ கு.க செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளரிடம் பேசிய கு.க செல்வம், நான் பாஜகவில் இணைய வில்லை. பாஜக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மட்டுமே கலந்து கொண்டேன் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பாஜகவின் இணைவதற்காக டெல்லி சென்ற கு.க செல்வம் பாஜகவின் தேசியத் தலைவரை சந்தித்து தமிழகம் திரும்பினார். மேலும் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை எல்லாம் கூறி வந்ததையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கு.க செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் என்று பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் செல்வத்தின் பேட்டி பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.