கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி 3ல் முன்னணி வகிக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் அக்கூட்டணியே முன்னிலையில் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ,ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு வயல்நாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; மூன்றாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் மலப்புரம், கோழிக்கோடு,கண்ணுரு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களிக்கும் நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 77 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. எஞ்சிய இரண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 10-ல் இடதுசாரி கூட்டணியும், 4-ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் 45-ல் காங்கிரஸ் கூட்டணியும் 35-ல் இடதுசாரி கூட்டணியும் முன்னிலையில் இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன.