பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதிலிருந்து சிபிஎம் பின்வாங்காது என்று மார்க்சிஸ்ட் கேரள மாநிலக் குழு தெரிவித்து உள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் கட்சிக்கு தெளிவு தேவை என்று சிபிஎம் மாநிலக் குழு தெரிவித்தது. ஏப்ரல் 23-வது கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் வரைவு அரசியல் தீர்மானம், சிபிஎம் காங்கிரஸுடன் இணையக்கூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. எனினும் பிளவுபடாத பாஜக எதிர்ப்பு முன்னணி இருப்பதை கட்சி உறுதிசெய்ய வேண்டும். இது முரண்பாடான ஒன்று என மாநிலக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி பின்வாங்கக் கூடாது எனவும் கேரள பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. மாநிலக் குழு உறுப்பினர்கள் பொதுவாக வரைவு அரசியல் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்து பிராந்திய கட்சிகளுடன் புரிந்து உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த வரைவுத் தீர்மானத்தில் திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக மாநிலக்குழுக் கூட்டம் கூடியது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் மத்திய குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.