Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை பார்த்து ஏன் பதறுகிறோம் ? தூக்கி எறிய வேண்டும்…. கூச்சப்படாம பேசுவாங்க…!!

திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக மக்களின் வறுமையைப் போக்குவதற்காக அவர் சிந்திக்கவில்லை. மக்களை கல்வி அடிப்படையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிந்திக்கவில்லை. மக்களிடையே ஒரு முற்போக்கான கருத்துகளை பரப்ப வேண்டும் என்கின்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது.

மக்கள் நல்லிணக்கத்தோடு மதம் ஜாதி, என்ற பிளவுகள் இல்லாமல், மோதல்கள் இல்லாமல், ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது அல்ல அவர்களின் நோக்கம். மக்களிடையே இருக்கின்ற ஜாதி உணர்வையும், மத உணர்வையும் தங்களுக்கான அரசியல் ஆதாயத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் சாதிய வாதிகளின் நோக்கமும், மதவாதிகளின் நோக்கமும்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சிகளும், திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் அதிகாரத்திற்காக போட்டியிடுகிறார்கள் என்றாலும்கூட, அவர்களோடு பாரதிய ஜனதா கட்சியை தேர்தலில் அதிகாரத்திற்காக போட்டியிடக் கூடிய கட்சி என்று அந்தக் கட்சிகளோடு பொருத்தி ஒப்பிட்டுப் பார்த்து விட முடியாது. அது வெறும் தேர்தலுக்காக, அதிகாரத்திற்காக மட்டுமே….

காங்கிரசை போட்டியாக கருதவில்லை. இடதுசாரி போட்டியாக கருதவில்லை. அம்பேத்கர் இயக்கத்தை பகையாக கருதவில்லை. இது வெறும் தேர்தலுக்காக மட்டுமல்ல. தேர்தல் அவர்களுடைய நோக்கமாக இருந்தாலும், அரசியல் அதிகாரம் அவர்களுடைய இலக்காக இருந்தாலும், அவர்களின் இறுதி இலக்கு என்பது வேறு. அகண்ட பாரதம் அமைக்க வேண்டும். ஹிந்து ராஷ்டிரம் என்று இந்த நாட்டிற்கு பெயர் சூட்ட வேண்டும். சமூக நீதி என்ற கோட்பாட்டை அழித்து ஒழிக்க வேண்டும்.

அதற்கு தடையாக இருக்கிற, தடைக்கல்லாக இருக்கிற, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும். இதை யாரும் வெளிப்படையாக மேடையில் பிஜேபி தலைவர்கள் பேச மாட்டார்கள். சங்பரிவாளர் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அதைப்பற்றி கொஞ்சமும் கூச்சம் படமாட்டார்கள், வெளிப்படையாகவே பேசுவார்கள். எங்கள் கடமை இதுதான் என்பார்கள்.

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சங்பரிவார் அமைப்புகளின் அரசியல் அணி தான் பிஜேபி. சங்பரிவார் அமைப்புகளின் அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டம் தான் பிஜேபியின் செயல்திட்டம். இந்தப் பார்வையோடு நீங்கள் பிஜேபியை பார்த்தால்தான், ஏன் நாம் பிஜேபியை விமர்சிக்கிறோம், பிஜேபியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம், ஏன் அச்சபடுகிறோம், ஏன் நாம் பதறுகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Categories

Tech |