நீட் ஆய்வு குழு அமைத்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது விளம்பரத்தை தேடும் நோக்கில் தொடரப்பட்டது என தெரிவித்த உயர் நீதிமன்றம், கமிட்டி அமைப்பதற்கு அரசுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதை வரவேற்ற முதல்வர் முக ஸ்டாலின் “இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு” என தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை அதற்குள் முடிக்க முடியாத சூழல் உள்ளது; இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கதே” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்கு தமிழக அரசின் உறுதிப்பாடு முயற்சிக்கு ஒரு தொடக்கப்புள்ளி என்று அவர் தெரிவித்துள்ளார்.