கோவையில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை எரிக்க முயன்றனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றபோது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.