லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பாரதிய ஜனதா எம். பி. வருண் காந்தி, அந்த கட்சியின் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 80 பேர் அடங்கிய புதிய செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார்.
இதில் கட்சியின் எம். பி. யான வருண் காந்தி மற்றும் அவரது தாயும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த கார் கூட்டத்தில் பாயும் தெளிவான வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.
கொலை செய்வதன் மூலம் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு இருந்த வருண் காந்தி, சம்மந்தப்பட்ட அப்பாவி விவசாயிகள் இரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே புதிய செயற்குழு பட்டியலில் வருண் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. இதனிடையே பாரதிய ஜனதா மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமிக்கும் செயற்குழுவில் இடம் தரவில்லை.
இதனால் செயற்குழு உறுப்பினர் என்ற வார்த்தைகளை தனது ட்விட்டர் சுயவிவரத்தில் இருந்து அவர் நீக்கியுள்ளார். ஹரியானா பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வீரேந்திர சிங்கும் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.