வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களிலேயே கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் எனவும், டெல்லி வன்முறைக்கு பாஜக தான் காரணம் என்றும் திரு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற கிசான் மகா பஞ்சாயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு தூக்கு தண்டனை போன்றது என்றும், அச்சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி நான்கு பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இச் சட்டங்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்திலேயே கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என்றும், அதனால்தான் இப்போராட்டம் அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். பிரிட்டிஷ்காரர்கள் கூட நம் விவசாயிகள் மீது இந்த அளவுக்கு அடக்குமுறைகளை ஏவ வில்லை என்றும் தெரிவித்தார். குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறை முழுவதும் பாஜக அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட என்றும், அங்கு கொடியேற்றியவர்கள் பாஜக தொண்டர்கள் தான் என்றும் திரு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்