கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு நேற்று இரவு தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் பைக்கில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெல்லாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் கட்சித் தொண்டர் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.