ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி வரை வாக்களிக்க நேரம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அசாம், மேற்குவங்காளம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.