டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடியால் பேச முடியுமா ? என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என வகுப்பு எடுக்கிறது.போராடுபவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற நாடகத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர் மாநாட்டில் பேசுகின்ற பிரதமர் விவசாயிகளை சந்தித்து சொல்ல முடியாதா? போராடுகின்ற விவசாயிகளை உள்துறை அமைச்சர் சென்று சந்திக்க முன் வராததற்கு காரணம் என்ன? உலகத்தின் கவனத்தை ஈர்த்த விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கத் தவறியது ஏன்?
வேளாண் சட்டங்களை எதிர்த்து நேற்று விவசாய சங்கத்தினர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தார்கள் இல்லையா ஆனால் அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைதுசெய்துள்ளனர். விவசாய சங்கத்தின் தலைவர் லக்ஷ்மண பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை நடத்தி அவரை ஒரு பெண் என்று கூட பாராமல் கீழே தள்ளி கைது செய்துள்ளார்கள். விவசாயிகளுக்காக போராடுபவர்களை அரசு எப்படி நடத்துகிறது என்பதற்கு நேற்று திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
இதற்காக தான் வருகிற 18-ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தை நமது மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் அறிவித்துள்ளோம். நமது கூட்டணி கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். விவசாயிகள் நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்காக நடத்தப்படவில்லை. மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் போராட்டம் .அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் தார்மீக ஆதரவை தர வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.