சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் செங்கமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது பாட்டியுடன் மங்களபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மங்களபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவன் மீது மோதிய கார் டிரைவரான சத்திய மூர்த்தி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.