சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மறுநாள் காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் ஸ்வைப்பிங் கருவி திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாட்டிலில் பெட்ரோல் வாங்க வந்த வாலிபர் ஸ்வைப்பிங் கருவியை திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் கருப்பூர் பகுதியில் வசிக்கும் சஞ்சய்(31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சஞ்சயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.