பேத்திகள் பாட்டியை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3-ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பழைய பேட்டையை சேர்ந்த சுப்பம்மாள்(90) என்பது தெரியவந்துள்ளது.
இந்த மூதாட்டியை அவரது 2 பேத்திகளும் இணைந்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது சுப்பம்மாளின் மகள் வழி பேத்தியான மேரி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக மூதாட்டியை பராமரித்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரை பராமரிக்க முடியாததால் தனது சகோதரியான மாரியம்மாள் வீட்டில் தனது பாட்டியை விட்டு வந்துள்ளார். ஆனால் மாரியம்மாள் மூதாட்டியை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனால் 2 பேரும் இணைந்து தங்களது பாட்டியை ஆட்டோவில் அழைத்துச் சென்று ஆதம்நகர் பகுதியில் இறங்கினர். இதனையடுத்து மாரியம்மாள் தான் கொண்டு சென்ற போர்வையை தலையணையாக வைத்து மூதாட்டியை படுக்க வைத்தார். அதன் பிறகு இரண்டு பேரும் இணைந்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேரி மற்றும் மாரியம்மாள் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.