தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் ராஜசேகர்- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் பாரதி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாரதி பாச்சாமல்லனூரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் ஒருவருடன் பாரதி கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீச்சல் தெரியாத பாரதி முதலில் கிணற்றில் இறங்கியதும் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர் சத்தம் போட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் குதித்து பாரதியை தேடியும் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாரதியின் உடலை மீட்டனர். பின்னர் மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.