சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் மர்ம விலங்கு கடித்து கொன்றதை அறிந்த செல்வம் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தோட்டத்தில் பதிந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானது. இதனால் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அங்கு கேமரா பொருத்தியுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.