ஒரு கிராமத்தில் சாலை அமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகிலுள்ள செங்காட்டூர் கிராமத்தில் தொடங்கி அனுமந்தபுரம் வரை சாலை போடும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மீண்டும் சாலைக்கான பணிகள் ஏப்ரலில் தொடங்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் நடைபெறாமல் அப்படியே போடப்பட்டுள்ளது.
ஜூலை 28ம் தேதி இரவு செங்காட்டூரை சேர்ந்த மூர்த்தி(30) என்பவர் சென்னையில் இருந்து திரும்பி செங்காட்டூர் வந்துள்ளார். அப்போது சாலையில் பள்ளம் தோண்டி இருப்பது தெரியாமல் அதில் விழுந்து படுகாயமடைந்தார். உடனே அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மூர்த்தி உயிரிழந்து விட்டார். அவருக்கு மனைவி, ஒரு வயது பெண் குழந்தை இருக்கின்றனர்.
இதையடுத்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சாலையில் தடுப்பு அமைக்காமல் இருந்த அதன் ஒப்பந்தகாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள், கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.