தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே பூஞ்சைகொல்லி குழிவயலில் ஆதிவாசி காலனி உள்ளது. இந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடிசை வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் குடிசை வீடுகளை சேதப்படுத்துகிறது.
எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின்படி கூடலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டு 11 தொகுப்பு வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது. எனவே பருவமழை ஆரம்பிப்பதற்குள் வீட்டின் பணிகளை முழுமையாக முடித்து தரவேண்டும் என மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.